சென்ற பதிவில் கூறியபடி இந்தியாவில் பெரும்பான்மையான ஹிந்துக்கள் தங்களுக்குள்ளான ஒற்றுமையை உறுதி செய்ய ஹிந்து வழிபாட்டு முறை மற்றும் வாழ்வு முறையான புருஷார்த்தங்களை பற்றி காண்போம் - அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் வள்ளுவர் நமக்கு திருக்குறளில் மூன்றாகப் பிரித்து குறள்களாக போதித்துள்ளார். திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள் அல்லது செல்வம், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
பண்டைய பாரதத்தில் வாழ்வு முறை சனாதன தர்மத்தின் படி நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு பிரிவுகளும் தனி மனிதனின் குணத்தையும், அவன் செய்யும் கர்மத்தையும் அதாவது தொழிலையும் அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்டிருந்தது. இந்த முறை வர்ண முறை என்றழைக்கப்பட்டது. நான்கு வர்ணங்களாவன - பிராம்மணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பதாகும். இவற்றில் பிராம்மணர் என்போர் - வேதம் ஓதுதலும், வேதம் ஓதுவித்தல் ஆகிய தொழிலை செய்தவர்களாவர். சத்திரியர் என்போர் போர்த்தொழிலை முன்னெடுத்துச் செல்வோராவர். வைசியர் என்போர் பண்டமாற்று முறையிலும் பின்னர் நாணயங்களைக் கொண்டும் வணிகம் செய்தும் பொருளீட்டி வரி கட்டியும் வாழ்ந்து வந்தனர். சூத்திரர் என்போர் உடலுழைப்பை முதலீடாகக் கொண்டு தொழில்களை நடத்தி வந்தனர். விவசாயம், கால்நடைப்பராமரிப்பு, கட்டுமானப்பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர்.
ஆயினும் இத்தொழில்கள் ஒருவரின் குணத்தினாலேயே, அவரின் விருப்பத்தின் பால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலினாலேயே வகுக்கப்பட்டு வந்தன. பிறப்பினால் அல்ல. ஆதியில் வந்த தொழில் வேட்டைத் தொழிலாக மட்டுமே இருக்க முடியும். பிறகு மீன் பிடித்தல். ஒரு வெற்றிகரமான வேடர் குலத்தலைவன் அவன் காலத்திற்குப் பிறகு அவன் சார்ந்த குடியினரைக் காக்க, புதிய வேடனைத் தேர்ந்தெடுக்க போட்டிகளும், வீர விளையாட்டுகளும் நடத்தபட்டன. "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்ற மொழிக்கேற்ப பலம் பொருந்தியவர்களால் மனித இனம் ஆளப்பட்டது; காக்கப்பட்டது. ஆயினும் மனித குலம் எண்ணிக்கையில் தழைத்துப் பெருகவே, புதிய நிலப்பரப்புகளைக் கண்டறியத் துவங்கினர்.
அப்புதிய நிலப்பரப்புகளை விவசாயத்திற்கும், கன்று வளர்ப்பிற்கும் பயன்படுத்திய மனித இனம் மேம்பட்டது. அவ்வாறு விவசாயத்தில் உற்பத்தியை உடலுழைப்பால் பெருக்கி வாழ்ந்தோரே சூத்திரர் ஆயினர். அந்நிலப்பரப்புகளை ஆளவும், அதில் பயமின்றி வாழவும், காவலுக்கு மனிதர்கள் தேவைப்பட்டனர். அவர்களே சத்திரியர் எனப்பட்டனர். மனித இனம், குலங்களாக பெருகியது. மனிதன் தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கிய நிலம், வான், நீர், காற்று, மற்றும் நெருப்பு ஆகியவற்றின் எல்லையின்மை கண்டு மெய்யுணர்ந்து இயற்கையில் இறையைக் கண்டான். மெய்யுணர்ந்தான், வேதங்கள் பிறந்தன. வழிபாட்டு முறைகள் தோன்றின. இறை நம்பிக்கை வளர்ந்தது. கலைகள் தோன்றின. மெய்யறிவில் இறையையும், இயற்கையையும் மனிதன் அளக்கத் துவங்கினான். அப்படி உருவானவர்களே பிராமணர்கள் எனப்பட்டனர்.
நிலப்பரப்பை முன்னிட்டு மோதல் எழுந்தது. மோதல்களால் உயிரிழப்பும், பொருளிழப்பும் ஏற்பட்டது. அதன் விளைவாக மனிதன் குலங்களிடையே பொருள் பற்றாக்குறையினால் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க வாணிபத்தைக் கண்டுபிடித்தான். பண்டமாற்று முறையில் வணிகம் துவங்கியது. யுத்தம் நின்று மனித குலங்களிடையே வாணிபம் செழித்தது. எல்லாரும் எல்லாமும் பெற்றனர். வாணிபம் செழிக்க அரசுகள் உருவாயின. சத்திரிய குலங்களில் அந்தந்த குடிகளுக்குளேயே வாரிசு முறையைக் கொண்டு வர நேர்ந்தது. வேற்று குல சத்திரியரை மற்றொரு குல சத்திரியர் அஞ்சினர். வேடராகவும், மீனவராகவும் துவங்கிய மனித இனத்தின் பயணம், அரசுகளாக விரிவடைந்தது. மொழிகள் உருவாயின. சிந்தனை விரிவடைய வேத நாகரீகம் மேலெழுந்தது.
அறத்தின் பாற்பட்டு பொருளீட்டவும், பொருளை பேண அரசுக்கு வரி கட்டவும், உழைப்பவன் நிம்மதியாக வாழவும் அரசுகளுக்கு மனித சமூகம் எண்ணற்ற விதிகளை வகுத்தளித்தது. சமுதாயக் கட்டமைப்பில் இந்த நான்கு வர்ணங்களும் சரியான பங்களிப்பை கொடுத்து நாகரீத்தில் உயர்ந்தன. பண்பாடு சிறந்தமையால், ஆன்மிகம் சிறந்தது. ஆன்மிகம் சிறந்ததால் கலைகள் வளர்ந்தன. கலைகளினால் கலாச்சாரம் உயர்ந்தது. அன்றைய வரலாறு இன்றைய புராணங்களாகின. அறம், தன்னறம், இல்லறம், என்று வகுக்கப்பட்டது. அகம் என்றும் புறம் என்றும் நிலைத்தது. அகத்தில் தன்னறம் - ஸ்வதர்மம் என்றும் இல்லறம் - சம்சாரம் என்றும் பொதுவாக வழங்கப்பட்டது. தமிழ் நூல்களில் அகநானூறு மற்றும் புறநானூறு போன்ற அரும்பெரும் இலக்கியங்கள் தோன்றின. திருக்குறள் என்னும் உலகப் பொது மறையில் கூறப்பட்டுள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவை வாடா மொழியில் தர்மம், அர்த்தம், காமம் என்று வழங்கப்பட்டது. நான்காவது விகுதியான வீடுபேறு வடமொழியில் மோக்ஷம் எனப்பட்டது. இவ்விகுதியை ஒருவன் வாழ்வில் உணர்ந்தால் அறிய முடியுமே அன்றி சொல்லில் இதை விவரிக்க இயலாது. எனவே தான் திருக்குறளில் வள்ளுவர் அறத்துப்பாலில் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்று நான்காகப் பிரித்துக் கூறினார். வீடு பேறடைதல் என்பதை அறத்தில் நிறுவி விட்டார்.
நம்முடைய ஒற்றுமைக்கு நாம் செய்ய வேண்டியது, நம் இந்த உயர்ந்த வாழ்வு முறையைக் கொண்டு வாழ்வதே ஆகும். தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு. ஹிந்துவாக ஒன்று பட்டால் மட்டும் போதுமா? ஏனைய மதத்தினரும் இப்போது நம் நாட்டில் ஒரு அங்கமாகி விட்டார்களே, அவர்களோடும் இணக்கமாக வாழ வேண்டுமல்லவா? அதை பற்றி என் அடுத்த பதிவில் சொல்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக