புதன், 4 ஜனவரி, 2017

அறம், பொருள், இன்பம் - 2

சென்ற பதிவில் கூறியபடி இந்தியாவில் பெரும்பான்மையான ஹிந்துக்கள் தங்களுக்குள்ளான ஒற்றுமையை உறுதி செய்ய ஹிந்து வழிபாட்டு முறை மற்றும் வாழ்வு முறையான புருஷார்த்தங்களை பற்றி காண்போம் - அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் வள்ளுவர் நமக்கு திருக்குறளில் மூன்றாகப் பிரித்து குறள்களாக போதித்துள்ளார். திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள் அல்லது செல்வம், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். 

பண்டைய பாரதத்தில் வாழ்வு முறை சனாதன தர்மத்தின் படி நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு பிரிவுகளும் தனி மனிதனின் குணத்தையும், அவன் செய்யும் கர்மத்தையும் அதாவது தொழிலையும் அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்டிருந்தது. இந்த முறை வர்ண முறை என்றழைக்கப்பட்டது. நான்கு வர்ணங்களாவன - பிராம்மணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பதாகும். இவற்றில் பிராம்மணர் என்போர் - வேதம் ஓதுதலும், வேதம் ஓதுவித்தல் ஆகிய தொழிலை செய்தவர்களாவர். சத்திரியர் என்போர் போர்த்தொழிலை முன்னெடுத்துச் செல்வோராவர். வைசியர் என்போர் பண்டமாற்று முறையிலும் பின்னர் நாணயங்களைக் கொண்டும் வணிகம் செய்தும் பொருளீட்டி வரி கட்டியும் வாழ்ந்து வந்தனர். சூத்திரர் என்போர் உடலுழைப்பை முதலீடாகக் கொண்டு தொழில்களை நடத்தி வந்தனர். விவசாயம், கால்நடைப்பராமரிப்பு, கட்டுமானப்பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். 

ஆயினும் இத்தொழில்கள் ஒருவரின் குணத்தினாலேயே, அவரின் விருப்பத்தின் பால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலினாலேயே வகுக்கப்பட்டு வந்தன. பிறப்பினால் அல்ல. ஆதியில் வந்த தொழில் வேட்டைத் தொழிலாக மட்டுமே இருக்க முடியும். பிறகு மீன் பிடித்தல். ஒரு வெற்றிகரமான வேடர் குலத்தலைவன் அவன் காலத்திற்குப் பிறகு அவன் சார்ந்த குடியினரைக் காக்க, புதிய வேடனைத் தேர்ந்தெடுக்க போட்டிகளும், வீர விளையாட்டுகளும் நடத்தபட்டன. "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்ற மொழிக்கேற்ப பலம் பொருந்தியவர்களால் மனித இனம் ஆளப்பட்டது; காக்கப்பட்டது. ஆயினும் மனித குலம் எண்ணிக்கையில் தழைத்துப் பெருகவே, புதிய நிலப்பரப்புகளைக் கண்டறியத்  துவங்கினர். 

அப்புதிய நிலப்பரப்புகளை விவசாயத்திற்கும், கன்று வளர்ப்பிற்கும் பயன்படுத்திய மனித இனம் மேம்பட்டது. அவ்வாறு விவசாயத்தில் உற்பத்தியை உடலுழைப்பால் பெருக்கி வாழ்ந்தோரே சூத்திரர் ஆயினர். அந்நிலப்பரப்புகளை ஆளவும், அதில் பயமின்றி வாழவும், காவலுக்கு மனிதர்கள் தேவைப்பட்டனர். அவர்களே சத்திரியர் எனப்பட்டனர். மனித இனம், குலங்களாக பெருகியது. மனிதன் தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கிய நிலம், வான், நீர், காற்று, மற்றும் நெருப்பு ஆகியவற்றின் எல்லையின்மை கண்டு மெய்யுணர்ந்து இயற்கையில் இறையைக் கண்டான். மெய்யுணர்ந்தான், வேதங்கள் பிறந்தன. வழிபாட்டு முறைகள் தோன்றின. இறை நம்பிக்கை வளர்ந்தது. கலைகள் தோன்றின. மெய்யறிவில் இறையையும், இயற்கையையும் மனிதன் அளக்கத் துவங்கினான். அப்படி உருவானவர்களே பிராமணர்கள் எனப்பட்டனர். 


நிலப்பரப்பை முன்னிட்டு மோதல் எழுந்தது. மோதல்களால் உயிரிழப்பும், பொருளிழப்பும் ஏற்பட்டது. அதன் விளைவாக மனிதன் குலங்களிடையே பொருள் பற்றாக்குறையினால் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க வாணிபத்தைக் கண்டுபிடித்தான். பண்டமாற்று முறையில் வணிகம் துவங்கியது. யுத்தம் நின்று மனித குலங்களிடையே வாணிபம் செழித்தது. எல்லாரும் எல்லாமும் பெற்றனர். வாணிபம் செழிக்க அரசுகள் உருவாயின. சத்திரிய குலங்களில் அந்தந்த குடிகளுக்குளேயே வாரிசு முறையைக் கொண்டு வர நேர்ந்தது. வேற்று குல சத்திரியரை மற்றொரு குல சத்திரியர் அஞ்சினர். வேடராகவும், மீனவராகவும் துவங்கிய மனித இனத்தின் பயணம், அரசுகளாக விரிவடைந்தது. மொழிகள் உருவாயின. சிந்தனை விரிவடைய வேத நாகரீகம் மேலெழுந்தது. 

அறத்தின் பாற்பட்டு பொருளீட்டவும், பொருளை பேண அரசுக்கு வரி கட்டவும், உழைப்பவன் நிம்மதியாக வாழவும் அரசுகளுக்கு மனித சமூகம் எண்ணற்ற விதிகளை வகுத்தளித்தது. சமுதாயக் கட்டமைப்பில் இந்த நான்கு வர்ணங்களும் சரியான பங்களிப்பை கொடுத்து நாகரீத்தில் உயர்ந்தன. பண்பாடு சிறந்தமையால், ஆன்மிகம் சிறந்தது. ஆன்மிகம் சிறந்ததால் கலைகள் வளர்ந்தன. கலைகளினால் கலாச்சாரம் உயர்ந்தது. அன்றைய வரலாறு இன்றைய புராணங்களாகின. அறம், தன்னறம், இல்லறம், என்று வகுக்கப்பட்டது. அகம் என்றும் புறம் என்றும் நிலைத்தது. அகத்தில் தன்னறம் - ஸ்வதர்மம் என்றும் இல்லறம் - சம்சாரம் என்றும் பொதுவாக வழங்கப்பட்டது. தமிழ் நூல்களில் அகநானூறு மற்றும் புறநானூறு போன்ற அரும்பெரும் இலக்கியங்கள் தோன்றின. திருக்குறள் என்னும் உலகப் பொது மறையில் கூறப்பட்டுள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவை வாடா மொழியில் தர்மம், அர்த்தம், காமம் என்று வழங்கப்பட்டது. நான்காவது விகுதியான வீடுபேறு வடமொழியில் மோக்ஷம் எனப்பட்டது. இவ்விகுதியை ஒருவன் வாழ்வில் உணர்ந்தால் அறிய முடியுமே அன்றி சொல்லில் இதை விவரிக்க இயலாது. எனவே தான் திருக்குறளில் வள்ளுவர் அறத்துப்பாலில் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்று நான்காகப் பிரித்துக் கூறினார். வீடு பேறடைதல் என்பதை அறத்தில் நிறுவி விட்டார்.

நம்முடைய ஒற்றுமைக்கு நாம் செய்ய வேண்டியது, நம் இந்த உயர்ந்த வாழ்வு முறையைக் கொண்டு வாழ்வதே ஆகும். தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு. ஹிந்துவாக ஒன்று பட்டால் மட்டும் போதுமா? ஏனைய மதத்தினரும் இப்போது நம் நாட்டில் ஒரு அங்கமாகி விட்டார்களே, அவர்களோடும் இணக்கமாக வாழ வேண்டுமல்லவா? அதை பற்றி என் அடுத்த பதிவில் சொல்கிறேன்.





அறம்,பொருள், இன்பம்

 தர்மம் - அறம், அர்த்தம் - பொருள், காமம் - இன்பம், மோக்ஷம் - வீடுபேறு, இவையே சனாதன தர்மத்தில் புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன. நம் தமிழ் கலாச்சாரம் வேறு, ஹிந்து கலாச்சாரம் வேறு என்று சொல்பவர்கள், திராவிட மாயையில் சிக்கியவர்கள் இவ்வாறு சொல்வதுண்டு. தனித் தமிழ் தேசியம் பேசி நாட்டைத் துண்டாட நினைத்தவர்கள் உண்டு. ஆண்ட சாதியினர் செய்த அடக்கு முறையாலும், முகலாய, மேற்கத்திய கிறிஸ்தவ ஆதிக்கத்தினால் இந்த ஆரிய திராவிட மாயை நம் மக்களிடையே வேற்றுமையை உண்டாக்க பெரிதும் உபயோகப்படுத்தப்பட்டது.

ஆண்ட சாதியினர் வர்ணாஸ்ரமத்தை தவறாக செயல் படுத்தினர். வர்ண முறையை தவறாக புரிந்து கொண்டு எளிய மக்களை வதைத்தும், தங்கள் சத்திரிய கடமையை மறந்தும், நாட்டைக் காக்கவும் மறந்தும், தங்களுக்குள் பூசலில் ஈடுபட்டும் சனாதன தர்மத்தை காற்றில் பறக்க விட்டனர். மராட்டியத்தில் வீர சிவாஜி, தமிழகத்தில் மற்றும் ஆந்திரத்தில் நாயக்க மன்னர்கள், சிந்து கரையில் சீக்கிய மன்னர்கள், ஆகியோர் முகலாயர்களை எதிர்த்து நின்றனர். ஆயினும் பெரிதாக ஒற்றுமை இல்லாத காரணத்தால் பல இடங்களில் தேவையின்றி அந்நியர் ஆளுகைக்கு உட்பட நேரிட்டது. அலெக்சாண்டரையே எதிர்த்த புருஷோத்தமனின் வீரத்தை புகழ ஆளின்றி, வெளிநாட்டு பயணிகள் இங்கே வந்து எழுதிய பயணக்குறிப்புகளைக் கொண்டு பாரதத்தின் வரலாற்றை மொத்தமாக மாற்றி சித்தரித்து போதிக்க வழி வகை செய்யப்பட்டது.

இஸ்லாமியர் அவர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட உருவ வழிபாட்டை எதிர்க்கவும், மதம் மாற்றி தங்கள் ஆளுகைக்குள் ஹிந்து மக்களை கொண்டு வரவும், கோவில்கள் இடிப்பு, விக்கிரகங்கள் உடைப்பு, நூலகங்கள் எரிப்பு, கட்டாய மத மாற்றம், வாள்முனையால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நாச வேலைகள் போன்ற அச்சுறுத்தல்களால் ஹிந்துக்களை அடக்கியும் வைத்திருந்தனர். இச்செயல்களை வரலாற்றில் விரிவாக இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் மெய்சிலிர்த்து எழுதியுள்ளார்கள்.

1600கள்  வாக்கில் வியாபாரம் செய்து பொருளீட்ட வந்த மேற்கத்தியர்கள் - ஐரோப்பியர்கள், அதாவது பிரிட்டிஷ், டட்சு, பிரெஞ்சு, முதலான நாடுகளை சேர்ந்த மக்கள் பாரதத்தை ஒரு மிகப்பெரிய வணிக சந்தையாக பார்த்தார்கள். இங்கே இருந்த வளங்களை தங்கள் பனி நிறைந்த நாடுகளுடன் ஒப்பிட்டு இந்த நாட்டின் வளங்களை சூறையாட இங்கே உள்ள மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் விழச்செய்தார்கள். ஹிந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களையும், ஹிந்துக்களுக்குள்ளே சாதிய கட்டமைப்பில் ஒருவருக்கெதிராக மற்றொருவரை தூண்டியும் தங்கள் சுரண்டலுக்கும் செல்வச்செழிப்பிற்கும் எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொண்டனர். கிறிஸ்தவ போதனை மையங்களை துவக்கினார்கள். செயற்கையான பஞ்சங்களை உருவாக்கினார்கள். விசுவாசத்தை ஏசுவுக்கு அளித்தவர்களுக்கு கல்வியும், உணவும் தரப்பட்டது. நாடெங்கும் சமஸ்க்ரித ஆசிரியர்களுக்கு பதிலாக ஹிந்தி மொழி கற்ப்பிக்கும் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

ஆனால் அப்போதைய வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இருந்த நிலச்சுவான்தார்களும், ஜமீன்தார்களும், சிற்றரசர்களும் வெள்ளையர்களுக்கு வரி கட்டி தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட சொத்துக்களை ஆளவே முற்பட்டனரே அன்றி சனாதன தர்மம் என்னும் பாரதத்தை இணைக்கும் பெரும் சங்கிலியை கையிலெடுக்க துணியவே இல்லை. அற்புத அறிவியல் ஆக்கங்களை நமக்கு ஆக்கியளித்த ஜெகதீஷ் சந்திரபோஸ், சத்யேந்திரநாத் போஸ், CV இராமன், மேக்நாத் சாஹா, ஸ்ரீனிவாச ராமானுஜன் போன்றாரின் அறிவை முன்னெடுத்து ஆக்கங்களை வளர்க்காமல் வெள்ளையர்களுக்கு சேவகம் செய்து தங்கள் சொத்துக்களை காத்துக் கொள்வதிலேயே குறியாய் இருந்தனர். 1857இல் சிப்பாய் கலவரம் துவங்கியதும் அதன் பிறகு தேச பக்தி வளரத் துவங்கியதும், அந்த தேச பக்தி விடுதலை போராட்டமாக மாறியதும், அப்போராட்டம் சுபாஷ்சந்திர போஸ், மோகன்தாஸ் காந்தி ஆகிய இரு வழிகளில் பயணித்ததும் நாமனைவரும் அறிவோம்.

இன்றைக்கு பாரதம் விடுதலை அடைந்து 70 வருடங்கள் ஆகப்போகின்றது. நாமனைவரும் உண்மையிலேயே ஒரு தாய் மக்கள் என்னும் உணர்வோடு இருக்கிறோமா? இந்திய விடுதலைக்காக பாடுபட்ட எண்ணற்ற தியாகிகளை உண்மையிலேயே நாம் மனதில் நினைத்து வழிபடுகிறோமா? பதில் நிச்சயம் இல்லை என்று தான் வருகிறது. வெறும் தமிழ்நாட்டை மட்டும் எடுத்துக் கொண்டால் ஆண்ட சாதிகளான முக்குலத்தோருக்கும், நாயக்கர்களுக்கும்,  வன்னியருக்கும், கௌண்டருக்கும், பெண் கொடுக்கல் வாங்கல் இருப்பது இல்லை. நாடார்களுக்குளேயே ஹிந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என்ற வேறுபாடு. தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி சொல்லவே வேண்டாம்; எப்போதும் ஒருவித பாதுகாப்பின்மையுடனேயே வாழ்கிறார்கள். பிராமணர்கள் ரொம்பவே ஒதுங்கிப் போகிறார்கள். எவ்வளவுதான் துரத்தி அடிக்கப்பட்டாலும் ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் இன்னொரு பிராமணன் முதல் வேலையாக அவ்விடத்தை விட்டு அகல்கிறார்கள். மற்ற சாதியினாராவது தங்கள் சாதிக்காரனுக்கு ஒரு சங்கடம் என்றால் முன்வந்து அவனை காக்க முயல்கிறார்கள். பிராமணர்கள் சுத்தம். இடை நிலை சாதிகளான முதலியார், செட்டியார், பிள்ளைமார், ஆசாரி போன்றோர் தனி தனியாக பிரிந்துள்ளார்கள். இவ்வத்தனை சாதிகளும் செயல் படுகின்றனவோ இல்லையோ தங்களுக்குள் ஒரு சங்கம் வைத்துள்ளார்கள். இந்த சாதி சங்கங்களால் ஒரு சுக்கும் பிரயோஜனம் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். இருந்தாலும் சமுதாயத்தில் தங்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமாம். பங்களிப்பு இல்லாமல் போகட்டும். ஆனால்  பிரதிநிதித்துவம் கட்டாயம் இருக்க வேண்டும்.

இத்தனையையும் தாண்டி அரசியல் கட்சிகள் மக்களை பிரித்து வைக்கும் வேலையை சிறிதும் சிந்தாமல் சிதறாமல் சிறப்பாய் செய்கின்றன. தாழ்த்தப்பட்டோருக்கு காவலனாய்க் காட்டிக்கொண்டு குல்லா போட்டு ஆண்ட சாதியினரை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஹிந்து சனாதன தர்மத்தை எதிர்க்கும் மீசைக்காரர் கட்சி ஒரு புறம். ஆண்ட சாதி பெருமையை நிலை நாட்ட, தங்கள் சாதி மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்து, வடமாவட்டங்களில் எண்ணிக்கை அதிகமுள்ள வாக்கு வங்கியை நம்பிய மருத்துவர் கட்சி ஒரு புறம். நாம் தமிழர் தானா, இல்லை திராவிடரா, என்ற குழப்பத்திலுள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள்; நாம் திராவிடர் இல்லை, ஹிந்துக்களும் இல்லை, தமிழர் மட்டுமே என்று கோலோச்ச துடிக்கும் ஒரு கட்சி, கம்யூனிசம் என்ற நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராத வறட்டு சித்தாந்தம் பேசும்  ஹிந்து எதிர்ப்புக் கட்சிகள்  இரண்டு, எதற்க்காக அரசியல் செய்ய வந்தோம் என்றே தெரியாமல் சரியாக தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னால்  வாபஸ் வாங்குபவர் கட்சி. நிலச்சுவாண்தார் வம்சாவளியில் பிறந்து காசும் வைத்துள்ளமையால் பெருமைக்கு கட்சி நடத்தும் ஒரு தஞ்சாவூர்க்காரரின் கட்சி. திரைத்துறையில் வாய்ப்பில்லை என்பதால் முதல்வராக துடிக்கும் 2 பேர் நடத்தும் கட்சிகள். இன்னும் எத்தனையோ உப்பு சப்பில்லாத உதிரிக்கட்சிகள் மற்றும் சாதிக்கட்சிகள் உண்டு.

நாமனைவரும் ஒன்று படாமல் இருப்பதற்காக இந்தக் கட்சிகளுக்கு தனித்தனியாக தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களும் உண்டு. அநேகமாக நாமனைவரும் ஒற்றுமையாக இருப்பது கிரிக்கெட் போட்டிகளின் போது மட்டுமே. IPL வந்ததால் அதற்கும் வந்தது வேட்டு. நன்றாக யோசியுங்கள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு தாய் மக்களாய் நம்மை இணைப்பது எது? மொழியா, இல்லை, அவை நாடு முழுதும் 100கும் மேலேயே விதவிதமாய் பேசப்படுகின்றன. மதங்களா? ம்ம்ம்ஹ்ம்... அவை தாறுமாறாகப்பிரிக்கின்றன. சாதிகளா? சத்தியமாக இல்லை. அவை ஆயிரக்கணக்கில் சிதறுண்டு போயுள்ளன. நன்றாய் யோசியுங்கள், நம்மை இணைப்பது நம் பண்பாடு. நம் கலாச்சாரம். உயரிய ஆன்மிகம் பொதிந்த நம் இயற்கையுடன் இணைந்த வழிபாட்டு முறைகள். மலைகளை, நதிகளை, காடுகளை, கடல்களை, வானை, நிலத்தை, ஒளியை, அக்கினியை வழிபடும் நம் பண்பாடு. வழிபாட்டு முறைகளுள் சிறிதாய் வேற்றுமை இருப்பினும், காஷ்மீரம் முதல் கன்யாகுமரி வரை சிவன் சிவன் தான். விஷ்ணு விஷ்ணு தான். முருகன் முருகன் தான். இந்திரன் இந்திரன் தான். கற்பூரமும், தீபமும், வித விதமான தோற்றங்களிலான விக்கிரகங்களும், பழமும், பூக்களுமான அர்ச்சனைகளும், சிறு பலிகளும், படையல்களுமே நம்மை இணைப்பது. அதை தான் நான் உயரிய பண்பாடு என்கிறேன். இயற்கையுடன் இணைந்த வாழ்வு என்கிறேன். உழவு, நெசவு, கைத்தறி, அறம் சார்ந்த பொருளீட்டல், கிராமம் சார்ந்த வாழ்வு, கால்நடைகளின் மீது கருணை, அனைத்தையும் இறை வடிவாய்க் காணுதல், கைகுவித்து தொழுதல், விழாக்களில் களியாட்டுகள், வீரம் சார்ந்த போர்த்தொழில், நியாயம் சார்ந்த அறச்சீற்றம், இவையே நம் பண்பாடு. ஜல்லிக்கட்டு, சிலம்பம், மல்யுத்தம், வில்யுத்தம், பளுதூக்குதல் போன்ற வீர விளையாட்டுக்கள் நம் பாரம்பரியத்தின் சிறப்புக்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர் கட்டிகாத்த  இந்த அறிய பாரத பண்பாடு, அந்நியர் வருகைக்கு பிறகு பெயரிடப்பட்டது. சிந்து நதிக்கு இப்பால் வாழ்ந்த நம்மை ஹிந்துக்கள் என்றழைத்தனர். நம் வாழ்வு முறை தான் அறம்,பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்னும் தர்மார்த்த காம மோக்ஷமாகும். இதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.