செவ்வாய், 20 அக்டோபர், 2020

மகாபாரதம் ஒரு வழித்துணை 1

 மகாபாரதம்... 3,4 வயது இளம்பிள்ளையாக இருந்த பருவத்தில் என் மாமனின் தோள்களில் ஏறி விளையாடிய காலத்தில், அவர் எனக்கு சொன்ன பீமசேனன் பகாசுரனை கொன்ற கதையும், ஜராசந்தனை கொன்ற கதையும், கீசகனையும், இடும்பனையும் கொன்ற கதையும் என்னை மகாபாரத உலகினில் அறிமுகம் செய்தது. பீமனை போல ஒரு பேரு வீரன், காவலன் இந்த உலகில் தேவை என்று என் சிறிய உலகில் நினைக்க துவங்கினேன். பின்னாட்களில் மகாபாரத பித்தனாகி வாழ்வை புதிய புதிய பரிமாணங்களில் காணவும், சோர்ந்து போகாமல் ஓடவும் இக்கதைகள் உடன் வரும் என்றெல்லாம் நினைத்தே பார்க்கவில்லை.

1995 களில் எல்லாம் இப்போது போல இணையமோ, ஸ்மார்ட் போன்களோ இல்லை. கணிப்பொறியி்யல் பயன்பாடு 90களின் பிற்ப்பகுதியில் அதிகரித்து தெருவுக்கு தெரு browsing center கள் முளைக்க துவங்கின. ஆனாலும் ஒரு மணி நேரத்திற்கு 25 ரூபாய் என்பது கட்டுபடி ஆகாத விஷயம். நகரங்களில் மட்டுமே கிடைக்கும் அனுபவம். எனவே அப்போதெல்லாம் புத்தகங்கள் மட்டும் தான் எங்கள் துணை. 


துக்லக்கில் சோ அவர்கள் வாராவாரம் எழுதிய மஹாபாரதம் பேசுகிறது என்னும் தொடருக்கு நான் மிகப்பெரிய ரசிகன் ஆனேன். பீமனை பற்றி நிறைய படிக்கலாம் என்ற குஷியில் ஆர்வமாக படிக்க துவங்கினால், பீமன் மட்டும் அல்ல, அர்ஜுனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன், துச்சாதனன், சகுனி, குந்தி, திரௌபதி, யுதிஷ்டிரன்,  திருதராஷ்டிரன், விதுரன் என்று வகை வகையான கதா பாத்திரங்கள் மனதை கொள்ளை கொண்டார்கள். சிறுவர் இலக்கியம் என்ற நிலையில் இருந்து பதின்ம வயதுக்கு உண்டான மனித மன கீழ்மைகள் புரிந்த வயது அது. எனவே மானுட உள்ளங்களை மகாபாரத கதை மாந்தர் மூலம் நெருங்குகையில் முற்றிலும் தெரிந்த ஆனால் புதிய உலகை அடைந்தேன். ஆயினும் பாரதம் கூறிய மானுட குலத்துக்கு தேவையான கருத்துக்களை புரிந்து கொள்ளும் வயது அல்ல அது. யார் நல்லவன்? யார் வீரன்? யார் கெட்டவன்? யார் தந்திரசாலி? என்பதான ஒரு ஒற்றை புரிதல் கொண்டு வாசிக்கையில் பாரதம் ஒன்றை தெளிவாக உணர்த்தியது. வலிமையாக இல்லாவிட்டால் இவ்வுலகில் நல்லவனாக இருப்பினும் நாய் படாத பாடு பட வேண்டும். எனவே வலிமையானவன் ஆக வேண்டும் எனில் லட்சியத்தோடு உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அந்த பதின்ம வயதில் பாரதம் என் மனதில் விதைத்தது. அர்ஜுனனை நான் மாபெரும் வீரனாக, நல் மனிதனாக, நேர் வழியில் மோதும் நியாயவானாக, கதாநாயகனாக போற்றத் துவங்கினேன். கர்ணனுக்கு அர்ஜுனன் மேல் இருக்கும் பகைமை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, வெளிப்படும் தருணங்களில் கர்ணனை மிகவும் வெறுத்துள்ளேன்... காரணம் பாண்டவர்கள் பட்ட துயரங்கள் மற்றும் அவமானங்கள் என் மனதில் ஆறாத வலியை ஏற்படுத்தி இருந்தது.


என்னுடைய மேல்நிலை பள்ளிக் கல்வியை கடக்கும் போதெல்லாம் தீராத மகாபாரத பித்து தான். உடன் பழகிய நண்பர்கள் நம்மேல் பொறாமை கொண்டு நம்மை மட்டம் தட்டவும், அவர்களுக்கு கீழேயே இருந்து முகஸ்துதி செய்யவும் விரும்பிய நேரம் அது. துரியோதனன் மனநிலை கொண்ட நண்பன் ஒருவன் செல்வ செழிப்பில் வளர்ந்த, அரசியல் கட்சி பிரமுகரின் மகன் ஒருவன் அப்போது எனக்கு சிம்ம சொப்பனமாக இருந்தான். அவன் பெயர் விக்கி. அவனுக்கு எங்கள் வகுப்பில் ஏகப்பட்ட எடுப்பு சோறுகள், ஜால்ரா கூட்டம். எல்லாம் ஒரே வகுப்பு தான். ஆனாலும் அவன் தன்னுடைய அணியில் புதிதாக எவனையும் சேர்க்கும் முன்னே அவனை அடித்து காயப்படுத்தி தான் பலத்தை உணர்த்திவிட்டு பின்பு தான் சேர்த்துக் கொள்வான். பிறகு புதியவனும் ஒரு ஜால்ராவாக மாற வேண்டும். இது எழுதப்படாத சட்டம். புதியவர் சேர்க்கையில் என் முறை வந்தது. நாமளாவது இறங்கி போவதாவது... நம் மனதில் தான் அர்ஜுனனும், பீமனும் குடி கொண்டுள்ளனரே... இவனுக்கு என்ன அடிபணிவது்? வாடா சும்மா யாருக்கு பவர் nu பாத்துரலாம் என்று அழைப்பு வந்தது. சரி இன்னைக்கு வருவது வரட்டும் என்று களத்தில் இறங்கி, அவன் வீட்டிற்கு அழைப்பின் பேரில் சென்று எல்லா மாணவர்கள் முன்னிலையிலும் செம அடி வாங்கி மண்ணை கவ்வியது இன்றும் நினைவில் உள்ளது. ஆனாலும் என் மனதில் இருந்த அந்த மாவீரர்கள் தோற்கவில்லை. மீண்டும் எழுந்து கவனத்துடன் மோத துவங்கினேன். இம்முறை அல்லக்கைகள் விலக்கி விடுவதை போல என் கைகளை இறுக்கி பிடித்துக் கொள்ள, வில்லன் நண்பன் விக்கி ஆவேசமாக பாய்ந்தான். அவன் எருமை போல பாய்ந்த வேகத்தை பயன்படுத்தி இந்த அல்லக்கை கூட்டத்தின் இருந்து கைகளை விடுவித்துக் கொண்டு தாறுமாறாக கைகளை சுழற்றினேன். பிரேம் ஆனந்த் என்பவன் தோட்ட குறிச்சி காரன். அவனுக்கு நாம் செய்த சம்பவத்தால் நெற்றிப் பொட்டில் ஜண்டு பாம் பாட்டில் அளவுக்கு புடைப்பு. வில்லன் விக்கியின் மூக்கில் இரத்தம். அவன் சட்டை கிழிப்பு..  மேலும் சில பல சில்லறைகளுக்கு ஆங்காங்கே சிராய்ப்பு காயங்கள். எனக்கு நாயடி... பேயடி.. ஐந்து நிமிடங்களில் அனைத்தும் முடிந்து விட்டது. சட்டை கிழிந்து பட்டன்கள் தெரிந்து பனியன் தெரிய வெற்றி சிரிப்புடன் பீமசேனரை வணங்கி எழுந்தேன். விக்கி சொன்னான், "இன்னிக்கு தப்பிச்சிட்ட....எல்லாரும் தடுத்துட்டாங்க.. பாக்கி இருக்குடா" என்றான். ஆனால் என்னை நெருங்கி வர பயந்தான். என் வாழ்வில் நான் கண்ட துரியோதன வடிவம் அவன். 


அன்று முதல் உடல் பலத்தை விட மனவலிமை தான் பெரிது என்பதை உணர்ந்தேன். எத்தனை பேர் எதிர்த்து வந்தாலும் நாம் உறுதியாக இருந்தால் சாதிக்க முடியும் என்ற படிப்பினையை கற்றேன். மேல்நிலைக் கல்வி முடித்து வெளியே வரும் வரை பல சலசலப்புகள் விக்கி வகையராவிடம் இருந்து வந்த வண்ணமே இருந்தன.... அர்ஜுனன் எப்படி அஸ்திரங்களை அடைந்து வலிமை பெற்றானோ அப்படியே நாமும் கல்லூரியில் சேர்ந்தால் தான் கெளரவம் கிடைக்கும் என்ற உந்துதலில் தக்கி முக்கி பள்ளிக்கல்வியில் தேர்ச்சி பெற்றேன். மகாபாரதப் பித்து மட்டும் குறையவே இல்லை..


தொடரும்